சாலையைக் கடக்கும் போது அடிப்பட்டு கிடக்கும்
உயிரைக் கண்டும் -"அலுவலகத்திற்க்கு நேரமாகி விட்டதே"
என விரையும் போதும்...
கூனிக் குறுகி கை நீட்டி பிச்சை கேட்கும்
மூதாட்டியைக் கண்டும் காணதவாறு
தலையை திருப்பிக் கொள்ளும் போதும்....
பிளாட்பாரத்தில் படுத்து இருக்கும் குழந்தைகளைக் கண்டு
"அனைத்துக்கும் காரணம் அரசின் பொறுப்பின்மையே"
என அடுத்தவர் மீது பழி சுமத்தி
நீங்கள் தப்பித்துக் கொள்ளும் போதும்...
சிறிதேனும் குற்ற உணர்ச்சி ஏற்பட்டால்
வருந்த தேவை இல்லை...
இவை அனைத்தையும் கண்டுவிட்டு
முகபுத்தகத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்து
குற்ற உணர்ச்சியை களைந்து செல்லும்
என்னை போல் சராசரி இந்தியர்களில்
நீங்களும் ஒருவர் தான்.....
வலைவீசி தேடுகிறார் உன் தந்தை...
அடுத்தடுத்து நடந்த இரு விபத்துக்களால்
அரசினரால் உன் வீடு முன்பு வைக்கப்பட்ட
"ஆபத்து நிறைந்த பகுதி" எனும் பலகையில்
"அழகு நிறைந்த பகுதி" என்று
திருத்தம் செய்த என்னை...!!
ஐயாயிரம் ரூபாய்க்கு பிறந்தநாள் கொண்டாடி
நூறு ரூபாய் டிப்ஸ் கொடுத்தபோது எல்லாம்
புரியாத பணத்தின் அருமை...
சிக்னலில் கரையும் வினாடிகளில்
இரு கால்களும் இல்லாமல்
தவழ்ந்து வந்து கையேந்தும் பிச்சைகாரனுக்கு
பத்து ரூபாயை எடுத்துப் பார்த்து
"சில்லரை இல்லப்பா!!!" எனும் போது புரிகிறது
மிகத் தெளிவாக....
ஜோதிடம் பார்த்து முதலெழுத்து கேட்டு
ஆயிரம் பெயர்களை பரிசீலித்து...
மாடர்னான பெயராக பாருங்கள் என்ற
மனைவியின் கருத்தை நினைவில் கொண்டு...
மங்களகரமான பெயரா பாருடா என்ற
அம்மாவின் அதட்டலை கருத்தில் கொண்டு...
கூப்பிட சுலபமான பெயராக பார் என்ற
அப்பாவின் நியாத்தை புரிந்து கொண்டு...
எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியாக
ஒரு பெயரை கண்டுபிடித்து...
இருமுறை சொல்லி பார்த்து, மெல்ல சிரித்து
குழந்தையின் கன்னம் சிவக்க கிள்ளி
ஊரே கேட்க உரக்க சொல்லிக் கூப்பிடும்
தந்தையின் பெருமிதத்தை பார்கையில் தோன்றுகிறது....
குழந்தை பிரசவிக்கும் நேரத்தை போலவே
அழகானது தான்....
குழந்தையின் பெயர் பிரசவிக்கும் நேரமும்....