பிரிவிற்கு பின்னான நம் முதல் சந்திப்பு...
ஐந்து நிமிடத்தில் முடித்துக் கொள்வதென
ஒப்பந்தத்துடன் தான் தொடங்குகிறது
நம் பேச்சு வார்த்தை...
ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும்
"உனக்கு நேரம் ஆகவில்லையா ?" என நானும்
"நீ கிளம்ப நேரம் ஆகவில்லையா ?"என நீயும்
கேட்டுக் கொண்டே தொடருகிறோம்
நம் பேச்சு வார்த்தையை...
நேரம் என்னவோ ஆகிக்கொண்டே தான் இருக்கிறது
ஐந்து ஐந்து நிமிடங்களாய்...
ஐந்து நிமிடத்தில் முடித்துக் கொள்வோம் என
நாம் சம்மதித்து ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் மட்டும்
காலாவதி ஆகிப் போனது...
முதலாம் ஐந்து நிமிடத்திலேயே....
No comments:
Post a Comment