எட்டு முறை படித்த கதை ஆகினும் உன் ஸ்பரிசம் தீண்டி வந்ததால்
9 ஆம் முறை படிக்க தொடங்குகிறேன் பொன்னியின் செல்வனை நான்...
வாளேடுத்து சண்டைக்கு அழைக்கிறான் வந்தியதேவன்
அரியணையை தியாகம் செய்ய தயார் என்கிறான் அருள்மொழி வர்மன்
நந்தினி உன் கால் தூசு பெற மாட்டாள் என்கிறான் ஆதித்த கரிகாலன்
பூங்குழலி அன்றி யாரையும் நினைக்காத
சேந்தன் அமுதனும் உண்டாம் இப்போட்டியில்....
"சரித்திரத்தில் இடம் பெற்ற காதல் கதைகளை அறிவோம் நாம்
சரித்திரம் ஆனவர்களே காதல் செய்து சண்டைக்கு அழைத்தால்
சுயம்வரம் வைத்தா தீர்ப்பது இப்பிரச்சனையை...???" என்று
புலம்புகிறேன் நான் உன்னிடம்....
"வைக்க சொல்லேன் சுயம்வரம்!!
நான் யாருக்கு மாலையிடுவேன் என்று உனக்கு தெரியாதா??"
என்று என்னை கட்டிபிடித்து முத்தமிடுகிறாய் நீ...
இறந்த பின்பு எப்படி தற்கொலை செய்து கொள்வது என்று
தேடி அலைகிறார்கள் காதல் தோல்வியுற்ற
என் சரித்திர நாயகர்கள்... :):)