தாத்தாவின் மரணம்...
சுமங்கலியை அமங்கலி ஆக்கும் சம்பிரதாயத்தில்
கையில் இருக்கும் கண்ணாடி வளையல்களை உடைத்து எறிகையில்
தவறி விழுந்த தங்க வளையலை எடுத்து
பாட்டி கையில் கொடுக்கிறேன் நான்...
"என் தங்கமே போய்ட்டாரு இது எடுக்குடா" என்று
வெறி கொண்டு வீசி எறிந்துவிட்டு செல்லும் என் மூத்த பாட்டி...
முப்பது வருடம் பேசாத அண்ணன் தவறிவிட்டார் என அறிந்ததும்
வீட்டு வாசலிலேயே உட்கார்ந்து ஒரு சொட்டு கண்ணீரும் சிந்தாமல்
"உள்ள வந்து தாத்தாவ பாருங்க பாட்டி" என கைபிடித்து அழைக்கையில்
கையை தட்டிவிட்டு உஷ்ண பார்வை பார்த்து திரும்பிவிட்டு
மயானம் கொண்டு செல்ல தாத்தாவை ரதத்தில் ஏற்றுகையில்
நடுவில் மறித்து "கடைசி வரைக்கும் பேசாம போய்ட்டியே அண்ணா!!" என
நெஞ்சில் அடித்து கதறி அழுத என் இளைய பாட்டி..
திரும்ப முடியாத கடைசி பயணத்தில் காது கிழியும் பறையை தாண்டியும்
பொட்டில் அறைந்து சேதி சொல்கிறது தாத்தாவின் மரணம்..
இம்முரட்டு மனிதர்களின் வெகுளி பாசத்தை...