Tuesday, 7 May 2013

அனன்யா குட்டியும் யானை பொம்மையும்




வீடெங்கும் அலைந்து திரிந்து ஓடிக் கொண்டிருந்த‌
அனன்யா குட்டியை பிடித்து அமர வைத்து
இன்றைய பாடத்தை தொடங்குகிறேன் நான்...
விலங்குகளின் பெயரை சொல்லி கொடுக்கும் முயற்சியில்
தூரத்தில் இருக்கும் யானை பொம்மையை எடுத்து வர சொல்லிவிட்டு 
அவள் என்ன செய்ய போகிறாள் என்று
ஒளிந்திருந்து கவனிக்கிறேன்...
தனக்கே உண்டான தோரணையுடன் அமர்ந்துகொண்டு
இடது கை தூக்கி யானை இருக்கும் திசை பார்த்து
"இங்கே வா" என்று விரல் மட்டும் அசைத்து அழைக்கும் 
அவளின் அழகு க‌ண்டு
ஒரு கால் முன் வைத்து நகர தொடங்கிய யானை
ஒளிந்திருக்கும் என்னைக் கண்டு 
தான் பொம்மை என்ற உணர்வு கொண்டு
அனன்யா குட்டிக்கு "அப்புறம்" என்று சைகை காட்டிவிட்டு
மறுபடியும் உறைகிறது...
திரும்பி என்னை முறைத்து விட்டு
யானை பொம்மை எடுக்க தவழ்ந்து செல்கிறாள்
என் அனன்யா குட்டி..

Sunday, 5 May 2013

ஒப்பந்தம்





பிரிவிற்கு பின்னான நம் முதல் சந்திப்பு...
ஐந்து நிமிடத்தில் முடித்துக் கொள்வதென‌ 
ஒப்பந்தத்துடன் தான் தொடங்குகிறது
நம் பேச்சு வார்த்தை...
ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும்
"உனக்கு நேரம் ஆகவில்லையா ?" என நானும்
"நீ கிளம்ப நேரம் ஆகவில்லையா ?"என நீயும்
கேட்டுக் கொண்டே தொடருகிறோம்
நம் பேச்சு வார்த்தையை...
நேரம் என்னவோ ஆகிக்கொண்டே தான் இருக்கிறது
ஐந்து ஐந்து நிமிடங்களாய்...
ஐந்து நிமிடத்தில் முடித்துக் கொள்வோம் என‌
நாம் சம்மதித்து ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் மட்டும்
காலாவதி ஆகிப் போனது...
முதலாம் ஐந்து நிமிடத்திலேயே....