Wednesday, 18 July 2012

குடைக்குள் மழை




சரியாக நாம் அலுவலகத்தில் இருந்து வீடு கிளம்புகையில்
மண் நனைக்க தொடங்குகிறது மழை...
"வழக்கம் போல் நீ குடையை மறந்திருப்பாய்!!
என்னுடனேயே வந்துவிடு" என்று அழைக்கிறாய் நீ...
"ஆம் மறந்துவிட்டேன்!!" என்று அசட்டு சிரிப்புடன்
உன் குடையை பகிர்ந்துக் கொள்கிறேன் நான்...
தெரிந்தும் தெரியாமலும் உரசிக் கொண்டு
சகதியில் வழுக்காமல் இருக்க கையை பற்றிக் கொண்டு
வழுக்கும் இடம் தாண்டிய பிறகும்
விடாமல் கையை கோர்த்துக் கொண்டு
குடையை தாண்டியும் நனைக்கப் பார்க்கும்
மழைத்துளியை ரசித்துக் கொண்டே
வீடு வந்து சேர்கிறோம் நாம்...
"இப்படி பயணம் அமையும் என்றால்
தினமும் பெய்யட்டுமே மழை" என்று
சுயநலம் கலந்த பொது நலத்துடன்
வரம் கேட்கிறேன் நான்...
சபித்துக் கொண்டு இருக்கிறது என்னை
இன்று காலையில் தான் ஞாபகமாய் 
என் பைக்குள் எடுத்து வைத்த 
என் குடை....
  

Sunday, 15 July 2012

அக்கறை




இரண்டு வாய் மட்டும் உண்டுவிட்டு
"போதும்மா!!" என்று சொல்லும் அனன்யா குட்டியை
"சாப்பிடலன்னா மூணு கண்ணன் பிடிச்சிட்டு போய்டுவான்!!
சாப்பிடுடா செல்லம்" என மிரட்டி ஊட்டுகிறேன் நான்...
"அம்மா சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சும்மா!!!" என்று
வாசலில் நின்று கையேந்தும் குழந்தையைக் கண்டதும்
என் கையில் இருக்கும் தட்டை பறித்துக் கொண்டு
அக்குழந்தையுடன் உணவைப் பகிர்ந்துக் கொண்டு
காதோடு காதாக மெல்ல கூறுகிறாள்
என் அனன்யா குட்டி...
"ரெண்டு நாள்லாம் சாப்பிடாம இருக்காத!
மூணு கண்ணன் பிடிச்சிட்டு போய்டுவான்!!!" என்று.... :)

தேர் திருநாள்





"எப்படி இருந்தது???
நான் இல்லாத நம் தேர் திருவிழா??"
என்று கேட்டாய் நீ...
"கண்படும் தூரத்தில் நீ இருந்திருந்தால்
கண்ணே உன்னை மட்டும் கண்டிருப்பேன்...
கண்காணா தூரத்தில் நீ இருந்ததாலோ என்னவோ
கண்ட பெண்கள் அனைவரிலும்
கண் உன்னை மட்டுமே கண்டது" என்றேன் நான்....
"அதற்கு காரணம் காதலாகவும் இருக்கலாம் - இல்லை
மற்ற பெண்களை நீ திருட்டுத்தனமாக காண‌
மற்றுமொரு காரணமாகவும் இருக்கலாம்!!
பொறுக்கி!!பொறுக்கி!!" என்றவாறே
என் காதை பிடித்து திருகுகிறாய் நீ...
செல்லமாய் தொடங்குகிறது நமக்குள்
ஊடல் என்னும் ஓர் ஒப்பில்லா உணர்வு....:):)