Saturday, 14 January 2012

எல்லா பொங்கலும் பொங்கல் அல்ல‌




பழையன கழிந்து புதியன புகுந்து
வீடு முழுவதும் சுண்ணக் கோலமிட்டு
வாசல்களுக்கு வேப்பிலை காப்பு கட்டி
விறைக்கும் குளிரிலும் விடியற்காலையில் எழுந்து
வாசல் அடைத்து வண்ணக் கோலமிட்டு
திருஷ்டிக்கு நடுவில் பூசணிப்பூ வைத்து
முற்றத்தில் கல் அடுக்கி
புதுப் பானைக்கு திலகமிட்டு
காவலுக்கு கரும்பை வைத்து
பொங்கி வரும் வேளையில்
தெரு மக்கள் முழுவதும் கூடி
பொங்கலோ பொங்கல் என்று குலவையிட்டு
தலை வாழை இலையில் சூரியனுக்கு படைத்து
உலகத்தையே காக்க வேண்டிவிட்டு
உண்ணும் பொங்கலை போல் இனிப்பதில்லை...
இன்று இன்டக்ச‌ன் அடுப்பில் பிரெஷர் குக்கரில்
பத்து நிமிடத்தில் முடிந்து விடும்
பொங்கல் எல்லாம்....

ருசி




தாமிரபரணி தண்ணீரின் ருசியிலேயே
தாகத்தை தொலைத்திட்ட நெல்லை மக்கள்...
வைகைத் தண்ணீரின் ருசியிலேயே
வாழ்க்கையை வாழ்ந்திட்ட மதுரை மக்கள்...
சிறுவாணி தண்ணீரின் ருசியிலேயே
சிறப்பாய் வாழ்ந்திட்ட கோவை மக்கள்...
காவேரியின் ருசி எங்கும் வராது என்று
கர்வத்தோடு வாழ்ந்திட்ட தஞ்சை மக்கள்...
"உனக்கு எந்த நீரின் ருசி பிடிக்கும்?" என்றதற்கு
"அக்வாபினா" என்று சொல்லி செல்கிறான்
ஆறுகளை வரைபடத்தில் மட்டுமே கண்டு
ஆற்று நீரின் ருசியை வாய்ச்சொல்லாக
மட்டுமே கேட்டு வளர்ந்திட்ட‌
மினரல் வாட்டர் தலைமுறையினனான‌
என் மகன்....

Tuesday, 3 January 2012

இரவல்




மீன் குழம்பு கணவனுக்கு பிடிக்கும் என‌
மீன் கடையில் சொல்லி
இரவல் வாங்கிய போதும்...
மளிகைக் கடையில் கடன் சொல்லி
மாதா மாதம் பொருட்களை
இரவல் வாங்கிய போதும்...
முன்னறிவிப்பு இல்லாமல் வந்த விருந்தினருக்கு
அவசரமாய் தேவை என பக்கத்து வீட்டில்
காபிப்பொடி இரவல் வாங்கிய போதும்...
எப்போதும் வருந்தியதில்லை...
குழந்தைப்பேறு இனி இல்லை
என்று நிச்சயமாய் தெரிந்தபின்
அனாதை விடுதியில்
குழந்தையை தத்தெடுக்கும் போது
வெடித்து அழுகிறாள் அவள்...
தாய்மையையும் இரவல்
வாங்க நேரிட்டதால்...

Monday, 2 January 2012

தொலைபேசி என்பது தொலைபேசி மட்டும் அல்ல‌




பதினொன்று மணிக்கே அழைத்து
பிறந்த நாள் வாழ்த்து கூறிவிட்டு
"இன்னும் யாரும் வாழ்த்தவில்லை அல்லவா??"
என்று நீ பதட்டத்துடன் கேட்ட நொடிகள்...
உன் படங்களை வைத்து இருப்பதாலேயே
உன் மேல் உரிமைக் கொண்டாடும்
என் தொலைபேசியின் புகைப்பட தொகுப்பு...
சத்தத்தை மட்டும் கண்ணுக்கு தெரியாத‌
காற்றின் அலைகளில் எனக்கு அனுப்பிவிட்டு
உன் முத்ததையும் ஈரத்தையும்
தானே வைத்துக் கொள்ளும்
என் தொலைபேசி...
உன் அழகிய நினைவுகளை
என் அருகிலேயே வைத்திருந்த‌
என் தொலைபேசியை தூக்கி எறிகிறேன்
நான் இன்று விரக்தியில்...
எத்தனை முறை அழைத்தாலும்
சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லும்
தொலைபேசி பெண்ணுக்கு
எப்போது தெரிய வரும் !!!
இந்த அழைப்பில் மட்டும் அல்ல‌
என் வாழ்க்கையிலும் நீ
"தொடர்பு எல்லைக்கு வெளியே" என்று...