காரணம் என்று யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்துக்காக
உன்னுடன் சண்டையுடன் தொடங்குகிறது எனது விடியல்...
தவறு உன்னுடையதாய் இருப்பினும்
மன்னிப்பு கேட்கும் படலம் என்னுடையதாகிறது...
ஆயிரம் முறை உன்னிடம் மன்னிப்பு கேட்டு
உன்னுடன் பேசாத ஒரு நாளின் சோகம் உனக்கு புரிய
சோக ஸ்மைலியே சோகம் கொள்ளும் அளவு நிரப்பி அனுப்புகிறேன்
வரலாற்று காதல் கடிதங்களுக்கு இணையான என் குறுஞ்செய்தியை...
இன்று பார்த்து வட்டியில்லா கடன் தருவதாக அழைக்கிறாள்
வங்கி சகோதரி ஒருத்தி...
புரியாத மொழியில் பல முறை பேசுகிறான்
தவறுதலாக எனக்கு அழைக்கும் ஒருவன்...
என்றும் இல்லாமல் என் நலத்தை பற்றி விசாரிக்கிறான்
நெடு நாளைய பள்ளி நண்பன் ஒருவன்...
ஒவ்வொரு முறை கைபேசி ஒலிக்கும் போதும்
நீயாகத்தான் இருப்பாய் என்று ஆவலுடன் எடுக்கிறேன் நான்...
விடியும் வரை நீளும் என் இரவுகள் நீ இல்லாததாலோ என்னவோ
இன்று சூரிய அஸ்த்தமனத்திலேயே தொடங்க
கனவிலாவது உன்னுடன் பேச துயில் உறங்க தொடங்குகிறேன் நான்...
அதிகாலையில் எழுந்ததும் இருபத்தைந்து தவறிய அழைப்புகள்
உன்னிடம் இருந்து என பறைசாற்றுகிறது என் கைபேசி...
மறுபடியும் சண்டையில் தொடங்கிவிட்ட ஒரு விடியல்
மறுபடியும் சோக ஸ்மைலி துணை கொண்டு தீட்ட தொடங்குகிறேன்
வரலாற்று காதல் கடிதங்களுக்கு இணையான என் குறுஞ்செய்தியை...
No comments:
Post a Comment