Wednesday, 13 February 2013

திமிரை வென்றவள்




அழகான தருணங்களை சிறை செய்வதற்காக‌
வாங்கபட்ட என் நிழற்பட கருவி கருவுகிறது...
கடவுளால் அழகாக படைக்கப்பட்டு இருப்பதையும் 
மிக அழகாக காட்ட த‌ன்னால் மட்டுமே முடிவதால்
தான் கடவுளுக்கும் மேலானது என்று...
அதர்மம் தலை எடுக்கும் போது எல்லாம் அவதரிக்கும் கடவுள் 
காதலர் தினத்திற்கு பரிசு வாங்கும் அலுவலில் இருப்பதால்
ஆணவத்தை அடக்கும் பொறுப்பு என்னுடையதே ஆகிறது...
காதலர் சின்னமாம் தாஜ்மஹாலின் புகைப்படமோ 
பனியால் மூடப்பட்ட அதிகாலை சூரியனில்
தங்க முலாம் பூசப்பட்ட தாஜ்மஹாலாய் ஜொலிக்க‌
திகைத்து போகிறேன் நான்...
சிற்பகலையில் சிறந்த மாமல்லபுரத்து புகைப்படமோ
பௌர்ணமி நிலவின் வெளிச்சத்தையும் உள்வாங்கி
பேச விடாத ஊமையாய் அடிக்கிறது என்னை...
என் இறுதி முயற்சியாய் உன்னை  கொண்டு வந்து நிறுத்துகிறேன்
என் திமிர் பிடித்த நிழற்பட கருவி முன்...
சாதரண மாந்தரையே சகலரும் வியக்கும் படி படம் எடுக்கும் தனக்கு
தேவதை போல் இருக்கும் உன்னை தேவமங்கையாய் காட்டுவது
பெரிய விஷயமா என்று அசட்டையாய் படம் எடுக்கிறது..
சிறை செய்யபட்ட உன் அழகை கண்டு வியந்து
வெற்றி புன்னகை கொண்டு உன்னை நோக்குகையில்
திகைப்படைந்து நிற்கிறது என்  நிழற்பட கருவி
கடந்த விநாடிக்கு இந்த விநாடி உன் அழகு இன்னும் கூடி இருப்பதால்..
பார்க்க பார்க்க பரவசமூட்டும் உன் அழகை சிறைபிடிக்க‌
இன்னும் எத்தனை முறை முயன்றாலும் 
தோற்றுக்கொண்டே தான் இருக்க போகிறது
உன்னை உன்னை விட அழகாய் காட்டும் முயற்சியில்
என் நிழற்பட கருவி...

No comments:

Post a Comment