நண்பன் சகோதரியின் திருமணத்தில் கலந்துகொள்ள
மடிவாலா பேருந்து நிலையத்தில் இறங்கி நடக்கிறேன் நான்..
நடைபழகும் குழந்தை பிடிப்பு ஏதும் இல்லாமல் தடுக்கி விழுவது போல
நீ என் வாழ்வில் இன்று இல்லாத பிடியின்மையால்
உன் நினைவலைகளில் தடுக்கி விழுந்து தொலைகிறேன்...
இதோ இதே சாலையில் தான் கால நேரம் பார்க்காமல்
என் கால்கள் உன்னுடன் பயணித்தது..
இதோ இதே ஆஞ்சநேயர் தான் பிரமச்சரியம் மறந்து
நீ என்னுடன் பேசுவதை பொறாமையுடன் பார்த்தது...
இதோ இந்த உணவகத்தில் தான் உனக்கு பிடித்த காபியை
கடைசி சொட்டு வரை ருசி பார்த்து நீ பெருமூச்செறிந்தது...
கடந்து செல்லும் பேருந்தின் பேரொலியில்
கனவுலகத்தில் இருந்து நிஜவுலகம் திரும்புகிறேன் நான்...
அன்று நான் விடை பெறும் தருணத்தில்
"கட்டிபிடித்து அனுப்பும் பழக்கம் எல்லாம் இல்லையா??"
என்ற என் வினாவிற்கு செல்லமாய் அடித்து நீ விடைகொடுத்த
அதே இடத்தில் நின்று கொண்டு நகர மறுக்கிறது என் உள்ளம்...
எனக்கான பேருந்தில் ஏறிக்கொண்டு
ஜன்னல் வழியே எட்டி எட்டி பார்த்துக் கொண்டு
இஷ்டமே இல்லாமல் பயணிக்க தொடங்குகிறது
உள்ளத்தை இழந்த என் உடல்...
No comments:
Post a Comment