Friday, 30 December 2011

புத்தாண்டு




புதுவருட பிறப்புக்கும் மற்ற நாட்களுக்கும்
பெரிதாய் வித்தியாசம் அறியாத
மழலைப் பருவம்...
தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சிகளிலேயே
தொலைந்து போன
ஆரம்ப பள்ளி பருவம்...
பிடித்த பெண்ணுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்ல‌
தெருவிற்கே கேக் கொடுத்து கொண்டாடிய‌
அரும்பு மீசை பருவம்...
நாம் வாழ்த்து சொன்னால் தான்
நண்பர்களுக்கு புத்தாண்டு சிறக்கும்  என நம்பி
இரவு தூக்கம் தொலைத்த‌
ஆரம்ப கல்லூரி பருவம்....
கடற்கரையில் கண்டவர்களை எல்லாம்
கட்டிபிடித்து வாழ்த்து சொன்ன‌
முதிர் கல்லூரி பருவம்...
இன்னும் எத்தனை பருவம் இருப்போம்
என்று தெரியாத ஆச்சர்யங்களும்
இந்த புத்தாண்டு இன்னும் சிறப்பாய் அமையும்
என்று நம்பிக்கைகளும் விதைத்துவிட்டு
அமைதியாய் கடக்கின்றன‌
ஒவ்வொரு பருவமும் கூடவே புத்தாண்டும்....

Wednesday, 28 December 2011

கைப்பிடித்த பொழுதுகள்




சாலையைக் கடந்து செல்கையில்
அதிவேகமாய் வரும் வண்டியைக் கண்டு
கண்ணை மூடிக் கொண்டு
என் கையை இறுகப் பற்றிய பொழுதுகள்...
என் சோகச் சுமையை
சுகமாய் பங்கிட்டுக் கொண்டு
ஆதரவாக என் கையை
உன் கையில் கொண்ட பொழுதுகள்...
வீட்டை நெருங்கும் ஒவ்வொரு அடியிலும்
உன் விரல்களில் ஒன்றை விடுவித்துக் கொண்டு
கடைசி விரலில் பிரிவும் பிரியமும்
இணைத்து பேசி சென்ற பொழுதுகள்...
என் அழகான பொழுதுகளுக்கு சொந்தமான‌
உன் கைபிடிப்பதற்காகவே கைகலப்பில்
ஈடுபடும் என் கரங்கள்
இன்று மலர் தூவி வாழ்த்துகின்றன...
மணமேடையில் வேறொருவன் கைபிடித்து
நீ வலம் வரும் போது...

Tuesday, 27 December 2011

அழியாத ஓவியம்





"மழையில் நனைந்தும்
அழியாத ஓவியத்தைப் பார்த்திருக்கிறாயா??"
என்று கேட்டேன் நான்..
"அது எப்படி இருக்க முடியும்!!!
நான் பார்த்தது இல்லை இதுவரை"
என்றாய் நீ...
"இதை பார் தெரியும்"
என்று கொடுத்தேன் நான்..
நான் கொடுத்தது
ஓவியத்தை அல்ல!!!
முகம் காட்டும் கண்ணாடியை...

Thursday, 22 December 2011

தலைமுறை இடைவெளி




"பீட்ஸாவின் ருசி வேறு எதிலும் வராது!!"
என்கிறாள் பேத்தி...
"பர்கர் தான் எனக்கு இஷ்டம்!!"
என்கிறான் பேரன்...
ஐயாயிரம் ரூபாய்க்கு செருப்பு வாங்கி
சந்தோஷப்படுகிறான் மகன்...
"எப்படி தான் இந்தியாவில் எல்லாம் இருக்கிறார்களோ??"
வியர்வையை துடைத்தவாறே அலுத்துக் கொள்கிறாள்
இந்திய வருகையின் போது மருமகள்...
இன்னும் கூட செருப்பின் வாசமே அறியாத கால்களுடன்
நெற்றி நனைக்கும் வியர்வையையே
உழைப்பின் வெகுமதியாய் நினைத்து
எத்தனை மூட்டை நெல் விளைந்தாலும்
பழைய சோறும் பச்சை மிளகாயுமே
அமிர்தம் என வாழ்கிறார்கள்
விவசாயி அப்பாவும் அம்மாவும்....

நிலவில் ஒரு மழைத்துளி




உன் மேல் விழுந்த‌
மழைத்துளி சிந்திக்கிறது...
நான் மேகத்தில் இருந்து
கீழே அல்லவா விழுந்தேன்!!!
எவ்வாறு இருக்கிறேன்
நிலவில் என்று..???

Wednesday, 14 December 2011

குற்றச்சாட்டு



தற்கொலைக்கு தூண்டியதாக குற்றச்சாட்டு
உன் மேல் காதல் நிலையத்தில்...
நேற்றிரவு பெய்த மழையில்
செடியில் இருந்து கீழே விழுந்துவிட்ட‌
ரோஜாவை எடுத்து சூடிக்கொள்கிறாய் நீ...
உன்னை தொட முடியாத வருத்தமோ??
இல்லை மற்றொரு பூவிடம்
தோற்றுவிட்ட அவமானமோ??
தெரியவில்லை...
நீ சூடியதுதான் தாமதம்
மற்ற பூக்கள் அனைத்தும்
தற்கொலை செய்து கொண்டன‌
காம்பில் இருந்து கீழே குதித்து...!!!

லஞ்ச‌ம்




சில்லென குளிரூட்டப்பட்ட அறை, கட்டில், மெத்தை
என சகல வசதிகளுடன் உறங்குகிறான்
முப்பது ரூபாய் கூலிக்கு வேலைக்கு சென்றவன்
அரசாங்க பிணவறையில்...
"ஒரு வாட்டி முகத்த பார்த்துக்குறேன்பா!!"
என்று கதறும் தாய்...
கணவனை இழந்த அதிர்ச்சியில் இருந்து
இன்னும் மீளாத மனைவி...
"அப்பா இனிமே வர மாட்டாராமா??"
என்று விசும்பும் குழந்தை...
மீள முடியாத தூக்கத்தில் மூழ்கி
அரசாங்க பிணவறையில்
இன்னும் துயில் கொண்டு இருப்பவர்கள்
எல்லோரும் அனாதைகள் அல்ல...
"100 ரூவா குடுத்துட்டு எடுத்துட்டுப் போ!!" என்று
பிணத்துக்கும் விலை பேசும் காவலாளிக்கு
காசு கொடுக்க முடியாதவர்களின்
சொந்தக்காரராகவும் இருக்கலாம்...!!!

Monday, 12 December 2011

வாசனை



பூந்தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம் நாம்..
நெற்றியில் விழுந்த முதல் துளி மழையை
துடைத்தவாறே கேட்கிறாய் நீ..
"மண் வாசனை பிடிக்குமா? மலர் வாசனை பிடிக்குமா?" என்று..
"வேலை நேரம் தாண்டியும் வெளிச்சம் தரும் நிலவில்
அதிகாலையிலேயே நான் உன்னைக் காண‌ வேண்டும் என‌
நீ வாசல் தெளித்து கோலம் போடும் போது
மண் வாசனை பிடிக்கும்...
ம‌ங்கும் ஒளி ப‌ர‌ப்பி சூரிய‌ன் பிரியும் மாலை வேளையில்
என் நாள் உன்னுட‌ன் முடிய‌ வேண்டும் என‌
உன் வீட்டு திண்ணையில் அம‌ர்ந்து பூ க‌ட்டுகையில்
மலர் வாசனை பிடிக்கும்" என்றேன் நான்...
சீ!!போடா!! என‌ வெட்க‌ப்ப‌ட்டு என் தோளில் சாய்ந்து
இறுக‌ க‌ட்டிக் கொள்கிறாய் நீ...
ம‌ய‌ங்குகிறேன் நான்
ம‌ண் வாச‌னையாலும் அல்ல‌
ம‌ல‌ர் வாச‌னையாலும் அல்ல‌
ம‌ங்கை உன் வாச‌னையால்...

 

மழலை




"அழுதால் தான் காசு கிடைக்கும்!! அழு"
என்று மிரட்டுகிறாள் அவள்...
தான் பட்டினி கிடந்தாவது
த‌ன் குழ‌ந்தைக்கு உண‌வ‌ளித்திடும்
த‌ன் தாயின்
இன்னொரு வ‌கையான‌ கொஞ்ச‌ல் தானோ
இந்த‌ மிர‌ட்ட‌ல் என‌ நினைத்து
அழாம‌ல் சிரிக்கின்ற‌து
பிச்சைக்காரியின் கைக்குழ‌ந்தை...!!!

ஏமாற்றம்




பல கை நீட்டி
அணைக்க வரும் மழையை
ஒரு குடை கொண்டு
தடுக்கிறாய் நீ...
குடையைக் கண்டுபிடித்தவனை
கோபத்தோடு தேடுகிறது
மழை..!!!

Friday, 9 December 2011

ஸ்மைலியும் காதலும்...




தொலைபேசியில் உன் குறுஞ்செய்தி...
"நான் உன்னை காதலிக்கிறேன்" என்பதை தொடர்ந்து
சிரிக்கும் ஸ்மைலி முத்த ஸ்மைலி என‌
உன் புன்னகையின் வெற்றிடத்தை
ஸ்மைலிக்களால் நிரப்ப முயற்சி செய்கிறாய்...
செல்லமாக கோபித்து கொள்கிறேன் ஸ்மைலிக்களிடம் நான்...
நம் காதலின் ஆரம்ப நாட்களில்
"நான் உன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை அறிந்தும்
கண்டும் காணாததை போல் இருந்து விட்டு
என்னைக் கடந்து செல்லும் போது நீ சிந்தி விட்டு செல்லும்
சிரிப்புக்கும் காதலுக்கும் ஈடாகுமா இந்த சிரிக்கும் ஸ்மைலி..??
உன்னிடம் முதல் முறையாக முத்தம் கேட்ட போது
முடியவே முடியாது என்று சொல்லி விட்டு
என் பொய் கோபத்தை நம்பி
உன் உதடுகளால் என் கன்னத்தில் பரிமாறிய‌
வெப்பத்துக்கும் ஈரத்துக்கும் ஈடாகுமா இந்த முத்த ஸ்மைலி??" என்று...
"கண்டிப்பாக ஈடாக மாட்டோம்" என்றவாறே
தங்களால் ஈடு செய்ய முடியாத‌
துக்கதாலும் அவமானத்தாலும் மாறிப் போயின‌
சிரிக்கும் ஸ்மைலியும் முத்த ஸ்மைலியும்
கண்ணீர் சிந்தும் ஸ்மைலிக்களாய்...

Tuesday, 6 December 2011

குழப்பம்




செடிகளின் அருகே நிற்காதே என்று
உனக்கு எத்தனை முறை சொல்வது...???
பார்
உன்னைக் கண்ட பட்டாம்பூச்சி
திகைத்து நிற்கிறது...
"இது என்ன புது வகையான மலர்" என்று...

Sunday, 4 December 2011

போராட்டம்




நீ சூடுவதால் பூக்களின் அழகு
மங்கி விடுகிறதாமே...
பூக்கள் அனைத்தும் செய்யப் போகிறதாம்
"சூடாத வரைப் போராட்டம் "
உனக்கு எதிராக....

Tuesday, 29 November 2011

கலகம்




கோவிலைச் சுற்றிக் கொண்டு இருந்தாய் நீ...
"தயவுசெய்து நிறுத்திக்கொள்ள சொல்
ஒரு சுற்றுடன் உன் காதலியை" என்று
பதறியவாறு வந்து புகார் செய்தார் பூசாரி...
"ஏன்" என்று வினவுகிறேன் நான்...
அழைத்துச் சென்று காட்டினார்
பிள்ளையாரும் இல்லாமல் முருகரும் இல்லாமல்
காலியாய் இருக்கும் கருவறைகளை...
விஷயம் என்னவென்றால்
"உன்னைக் கண்டபின்
பிரம்மச்சர்யத்தை கைவிடப் போவதாக பிள்ளையாரும்
வள்ளியும் தெய்வானையும் வேண்டாமென முருகரும்
வாதம் செய்துக் கொண்டு இருக்கின்றனராம்"....
நாரதரும் இல்லாமல் ஞானப்பழமும் இல்லாமல்
சகோதரச் சண்டையை மூளச்செய்து விட்டு
அமைதியாக சுற்ற ஆரம்பிக்கிறாய் நீ
இரண்டாவது சுற்றை....

Wednesday, 23 November 2011

நினைவில் நின்ற நாட்கள்




சில நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும் போது
கூடவே உன் சுடிதாரின் நிறமும் நினைவுக்கு வருகிறது...
உன்னை அதிக முறை அலங்கரித்த பெருமையுடைய‌
நம் பள்ளிச் சீருடையான பச்சை சுடிதார்...
தேர்வு முடிவுகள் வெளியான அன்று காலையில்
பதட்டத்துடன் இருந்த எனக்கு
திருநீறு அணிவித்துவிட்ட போது
நீ அணிந்திருந்த உனக்கு அதிர்ஷ்டமான பிங்க் சுடிதார்...
"உனக்கு பிடிக்கும் என்று தான் தேடிப்பிடித்து வாங்கினேன்"
என்று கூறி நீ அணிந்து வந்து மஞ்சள் சுடிதார்...
வண்டியில் சென்று கொண்டு இருந்த என்னை
முந்திச் சென்று "தோற்று விட்டாயே" என்று
பழிப்புக் காட்டிய போது அணிந்திருந்த கருப்பு சுடிதார்...
அனைத்தும் இருக்கின்றது நினைவில்...
ஆனால் "இத்துடன் நம் உறவு முடிந்தது" என்று நீ சொன்ன
அந்த நாளில் ஒரு நொடி மௌனித்து பின்பு கேட்கிறேன் நான்...
"இன்று என்ன கலர் சுடிதார் என்று???"
இந்த நாள் ஞாபகம் வேண்டாம் உனக்கு என்று துண்டித்தாய் நீ
கைபேசி அழைப்பையும் என் தொடர்பையும்...
முதல் முறையாக உன் சுடிதாரின் நிறம் தெரியாமலேயே
என் நெஞ்சில் பதிந்து விட்ட ஒரு நாள்...

Tuesday, 22 November 2011

தண்டணை




1,2,3,4,5...
ஐந்து இரயில்கள் கடந்த பின்
ஆறாவது இரயிலில் வந்து இறங்குகிறாய் நீ...
உன் வியர்வையால் கைக்குட்டைக்கு மோட்சம் அளித்தவாறே
"சாரிடா!!! லேட்டாயிடுச்சு" என்றாய்...
"மன்னிப்பு எல்லாம் கிடையாது கண்டிப்பாக தண்டனைதான்
ஒவ்வொரு இரயிலுக்கும் ஒரு முத்தம்
மொத்தம் ஐந்து" என கன்னத்தைக் காட்டுகிறேன் நான்...
"சீ!!! பொறுக்கி!!ஐந்து எல்லாம் கிடையாது
ஒன்றே ஒன்று தான்" என்று
உன் உதட்டுச் சாயத்தால் என் கன்னத்தில்
திருஷ்டிப் பொட்டு வைத்துச் செல்கிறாய் நீ...
"உயிரைக் கொடுத்து காதலிப்பது நான்
முத்தம் மட்டும் கன்னத்திற்கா??" என்று கோபித்துக்கொண்டு
வேலை நிறுத்தம் செய்யத் தொடங்குகிற்து
என் இதயம்... !!!

Monday, 21 November 2011

பொறாமை




நீ அணிந்திருப்பதாலேயே கர்வத்துடன்
இருக்கும் உன் உடை...
உன் கையில் கட்டப்பட்ட அதிர்ச்சியில்
உறைந்துபோய் நின்றுவிட்ட உன் கடிகாரம்...
உன் கால்களில் கட்டப்பட்டு இருப்பதாலேயே
கூடுதல் ஒலி எழுப்பும் உன் கால் கொலுசு...
நீ எழுதுகையில் உன் கை அசைவுக்கேற்ப‌
நடனமாடும் உன் வளையல்...
நீ தலையாட்டி பேசும் போது உன்னை
ஆமோதிப்பது போல் ஆடும் உன் காது ஜிமிக்கி...
உன் விரல்களில் சிறைப்பட்டு இருந்தாலும்
ஆனந்தமாய் இருக்கும் உன் மோதிரம்...
அடிக்கடி உன் முத்ததைப் பெறும்
கிருஷ்ணர் டாலர் போட்ட உன் கழுத்து சங்கிலி..
இந்த உயிரற்ற பொருட்கள் அனைத்தும்
உயிர் பெற்று திகழ்கின்றன‌
உன்னை தொட்டுக்கொண்டு இருப்பதால்...
உயிருள்ள நானோ ஏங்கிக் கொண்டு இருக்கிறேன்
இவற்றில் ஏதேனும் ஒரு உயிரற்ற பொருளாய்
இருந்திருக்கக் கூடாதா என்று....

பிரிவுக்கு அப்பாற்பட்ட உறவு






சண்டையினால் உலக நாடுகளே பிரியும் போது
இவர்கள் எம்மாத்திரம் என்று 
சண்டையை விதைத்தது காலம் நமக்குள்...
சிரிப்பு என்னும் வெள்ளை கொடி காட்டி
சமரசம் ஆகினோம் நாம்...
கருத்து வேற்றுமையினால் கண்டிப்பாக பிரிவோம் என‌
கருத்து வேற்றுமையை விதைத்தது காலம் நமக்குள்...
வேற்றுமையில் ஒற்றுமை கண்டு
இந்தியர்கள் என நிருபித்தோம் நாம்...
பிரித்து வைப்பது தான் ஒரே வழி என‌
உன்னை அங்கேயும் என்னை இங்கேயும் என‌
பந்தாடியது காலம்...
பிரியமானவர்களுக்கு இல்லை 
பிரிவு ஒரு பொருட்டு என 
காட்டிக் கொண்டு இருக்கிறோம் நாம்..
சண்டையினால்...
கருத்து வேற்றுமையினால்...
பிரிவினாலும் கூட பிரிக்க முடியாதது
நம் நட்பு என்று...
அனுபவத்தினால் பாடம் கற்றுக் கொடுக்கும் காலம்
பாடம் கற்று கொண்டது.... :):):)

நினைவெல்லாம் காதல்




கர்நாடகாவில் பதியப்பட்ட வண்டியாக இருப்பினும்
கடந்து செல்லும் "ஆக்டிவா" பெண் விட்டுச் செல்கிறாள்
பெட்ரோல் புகையையும் கூடவே உன் நினைவையும்....
"உன்னை விட அதிகமாக சாப்பிடுகிறேன்" என பந்தயமிட்டு
பாதியிலேயே எழுந்து செல்லும் தோழி விட்டுச் செல்கிறாள்
மீதமான உணவையும் கூடவே உன் நினைவையும்....
எப்பொழுதும் "கிருஷ்ணா என்னைக் காப்பாற்று"
என முறையிடும் தோழி விட்டுச் செல்கிறாள்
கிருஷ்ணரிடம் வேண்டுதலையும் கூடவே உன் நினைவையும்....
மிட்டாய் தந்துவிட்டு "எனக்கு பிடித்த கருப்பு நிறத்தில்
என் பிறந்த நாள் உடை" என சொல்லிச் செல்லும் தோழி 
விட்டுச்செல்கிறாள் மிட்டாயின் இனிப்பையும் 
கூடவே உன் நினைவையும்....
இப்படி நான் காணும் பெண்களிடம் எல்லாம்
உன் நினைவை காண்பதிலேயே மகிழ்ச்சி அடைகிறேன் நான்... 
ஆனால் இன்னும் கூட ஏன் என்று காரணம் சொல்லாமல்
தனிமையில் விட்டுச் சென்றாய் நீ என்னையும் 
கூடவே உன் நினைவையும்....

முகப் புத்தகம்




உன் எண்ணங்களை status ஆகவும்...
உன் கிண்டல்களை comments ஆகவும்...
உன் விருப்பங்களை likes ஆகவும்
நான் தெரிந்து கொண்டாலும்...
                                                                                               
முகம் பார்த்து நாம் பேசிய
அந்த நாட்களின் இடைவெளியை
நிரப்ப முயற்சி செய்து
தோற்று கொண்டே இருக்கிறது தினமும்
முகப்புத்தகம்.. :(:(