Wednesday, 18 July 2012

குடைக்குள் மழை




சரியாக நாம் அலுவலகத்தில் இருந்து வீடு கிளம்புகையில்
மண் நனைக்க தொடங்குகிறது மழை...
"வழக்கம் போல் நீ குடையை மறந்திருப்பாய்!!
என்னுடனேயே வந்துவிடு" என்று அழைக்கிறாய் நீ...
"ஆம் மறந்துவிட்டேன்!!" என்று அசட்டு சிரிப்புடன்
உன் குடையை பகிர்ந்துக் கொள்கிறேன் நான்...
தெரிந்தும் தெரியாமலும் உரசிக் கொண்டு
சகதியில் வழுக்காமல் இருக்க கையை பற்றிக் கொண்டு
வழுக்கும் இடம் தாண்டிய பிறகும்
விடாமல் கையை கோர்த்துக் கொண்டு
குடையை தாண்டியும் நனைக்கப் பார்க்கும்
மழைத்துளியை ரசித்துக் கொண்டே
வீடு வந்து சேர்கிறோம் நாம்...
"இப்படி பயணம் அமையும் என்றால்
தினமும் பெய்யட்டுமே மழை" என்று
சுயநலம் கலந்த பொது நலத்துடன்
வரம் கேட்கிறேன் நான்...
சபித்துக் கொண்டு இருக்கிறது என்னை
இன்று காலையில் தான் ஞாபகமாய் 
என் பைக்குள் எடுத்து வைத்த 
என் குடை....
  

Sunday, 15 July 2012

அக்கறை




இரண்டு வாய் மட்டும் உண்டுவிட்டு
"போதும்மா!!" என்று சொல்லும் அனன்யா குட்டியை
"சாப்பிடலன்னா மூணு கண்ணன் பிடிச்சிட்டு போய்டுவான்!!
சாப்பிடுடா செல்லம்" என மிரட்டி ஊட்டுகிறேன் நான்...
"அம்மா சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சும்மா!!!" என்று
வாசலில் நின்று கையேந்தும் குழந்தையைக் கண்டதும்
என் கையில் இருக்கும் தட்டை பறித்துக் கொண்டு
அக்குழந்தையுடன் உணவைப் பகிர்ந்துக் கொண்டு
காதோடு காதாக மெல்ல கூறுகிறாள்
என் அனன்யா குட்டி...
"ரெண்டு நாள்லாம் சாப்பிடாம இருக்காத!
மூணு கண்ணன் பிடிச்சிட்டு போய்டுவான்!!!" என்று.... :)

தேர் திருநாள்





"எப்படி இருந்தது???
நான் இல்லாத நம் தேர் திருவிழா??"
என்று கேட்டாய் நீ...
"கண்படும் தூரத்தில் நீ இருந்திருந்தால்
கண்ணே உன்னை மட்டும் கண்டிருப்பேன்...
கண்காணா தூரத்தில் நீ இருந்ததாலோ என்னவோ
கண்ட பெண்கள் அனைவரிலும்
கண் உன்னை மட்டுமே கண்டது" என்றேன் நான்....
"அதற்கு காரணம் காதலாகவும் இருக்கலாம் - இல்லை
மற்ற பெண்களை நீ திருட்டுத்தனமாக காண‌
மற்றுமொரு காரணமாகவும் இருக்கலாம்!!
பொறுக்கி!!பொறுக்கி!!" என்றவாறே
என் காதை பிடித்து திருகுகிறாய் நீ...
செல்லமாய் தொடங்குகிறது நமக்குள்
ஊடல் என்னும் ஓர் ஒப்பில்லா உணர்வு....:):)

Saturday, 14 January 2012

எல்லா பொங்கலும் பொங்கல் அல்ல‌




பழையன கழிந்து புதியன புகுந்து
வீடு முழுவதும் சுண்ணக் கோலமிட்டு
வாசல்களுக்கு வேப்பிலை காப்பு கட்டி
விறைக்கும் குளிரிலும் விடியற்காலையில் எழுந்து
வாசல் அடைத்து வண்ணக் கோலமிட்டு
திருஷ்டிக்கு நடுவில் பூசணிப்பூ வைத்து
முற்றத்தில் கல் அடுக்கி
புதுப் பானைக்கு திலகமிட்டு
காவலுக்கு கரும்பை வைத்து
பொங்கி வரும் வேளையில்
தெரு மக்கள் முழுவதும் கூடி
பொங்கலோ பொங்கல் என்று குலவையிட்டு
தலை வாழை இலையில் சூரியனுக்கு படைத்து
உலகத்தையே காக்க வேண்டிவிட்டு
உண்ணும் பொங்கலை போல் இனிப்பதில்லை...
இன்று இன்டக்ச‌ன் அடுப்பில் பிரெஷர் குக்கரில்
பத்து நிமிடத்தில் முடிந்து விடும்
பொங்கல் எல்லாம்....

ருசி




தாமிரபரணி தண்ணீரின் ருசியிலேயே
தாகத்தை தொலைத்திட்ட நெல்லை மக்கள்...
வைகைத் தண்ணீரின் ருசியிலேயே
வாழ்க்கையை வாழ்ந்திட்ட மதுரை மக்கள்...
சிறுவாணி தண்ணீரின் ருசியிலேயே
சிறப்பாய் வாழ்ந்திட்ட கோவை மக்கள்...
காவேரியின் ருசி எங்கும் வராது என்று
கர்வத்தோடு வாழ்ந்திட்ட தஞ்சை மக்கள்...
"உனக்கு எந்த நீரின் ருசி பிடிக்கும்?" என்றதற்கு
"அக்வாபினா" என்று சொல்லி செல்கிறான்
ஆறுகளை வரைபடத்தில் மட்டுமே கண்டு
ஆற்று நீரின் ருசியை வாய்ச்சொல்லாக
மட்டுமே கேட்டு வளர்ந்திட்ட‌
மினரல் வாட்டர் தலைமுறையினனான‌
என் மகன்....

Tuesday, 3 January 2012

இரவல்




மீன் குழம்பு கணவனுக்கு பிடிக்கும் என‌
மீன் கடையில் சொல்லி
இரவல் வாங்கிய போதும்...
மளிகைக் கடையில் கடன் சொல்லி
மாதா மாதம் பொருட்களை
இரவல் வாங்கிய போதும்...
முன்னறிவிப்பு இல்லாமல் வந்த விருந்தினருக்கு
அவசரமாய் தேவை என பக்கத்து வீட்டில்
காபிப்பொடி இரவல் வாங்கிய போதும்...
எப்போதும் வருந்தியதில்லை...
குழந்தைப்பேறு இனி இல்லை
என்று நிச்சயமாய் தெரிந்தபின்
அனாதை விடுதியில்
குழந்தையை தத்தெடுக்கும் போது
வெடித்து அழுகிறாள் அவள்...
தாய்மையையும் இரவல்
வாங்க நேரிட்டதால்...

Monday, 2 January 2012

தொலைபேசி என்பது தொலைபேசி மட்டும் அல்ல‌




பதினொன்று மணிக்கே அழைத்து
பிறந்த நாள் வாழ்த்து கூறிவிட்டு
"இன்னும் யாரும் வாழ்த்தவில்லை அல்லவா??"
என்று நீ பதட்டத்துடன் கேட்ட நொடிகள்...
உன் படங்களை வைத்து இருப்பதாலேயே
உன் மேல் உரிமைக் கொண்டாடும்
என் தொலைபேசியின் புகைப்பட தொகுப்பு...
சத்தத்தை மட்டும் கண்ணுக்கு தெரியாத‌
காற்றின் அலைகளில் எனக்கு அனுப்பிவிட்டு
உன் முத்ததையும் ஈரத்தையும்
தானே வைத்துக் கொள்ளும்
என் தொலைபேசி...
உன் அழகிய நினைவுகளை
என் அருகிலேயே வைத்திருந்த‌
என் தொலைபேசியை தூக்கி எறிகிறேன்
நான் இன்று விரக்தியில்...
எத்தனை முறை அழைத்தாலும்
சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லும்
தொலைபேசி பெண்ணுக்கு
எப்போது தெரிய வரும் !!!
இந்த அழைப்பில் மட்டும் அல்ல‌
என் வாழ்க்கையிலும் நீ
"தொடர்பு எல்லைக்கு வெளியே" என்று...

Friday, 30 December 2011

புத்தாண்டு




புதுவருட பிறப்புக்கும் மற்ற நாட்களுக்கும்
பெரிதாய் வித்தியாசம் அறியாத
மழலைப் பருவம்...
தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சிகளிலேயே
தொலைந்து போன
ஆரம்ப பள்ளி பருவம்...
பிடித்த பெண்ணுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்ல‌
தெருவிற்கே கேக் கொடுத்து கொண்டாடிய‌
அரும்பு மீசை பருவம்...
நாம் வாழ்த்து சொன்னால் தான்
நண்பர்களுக்கு புத்தாண்டு சிறக்கும்  என நம்பி
இரவு தூக்கம் தொலைத்த‌
ஆரம்ப கல்லூரி பருவம்....
கடற்கரையில் கண்டவர்களை எல்லாம்
கட்டிபிடித்து வாழ்த்து சொன்ன‌
முதிர் கல்லூரி பருவம்...
இன்னும் எத்தனை பருவம் இருப்போம்
என்று தெரியாத ஆச்சர்யங்களும்
இந்த புத்தாண்டு இன்னும் சிறப்பாய் அமையும்
என்று நம்பிக்கைகளும் விதைத்துவிட்டு
அமைதியாய் கடக்கின்றன‌
ஒவ்வொரு பருவமும் கூடவே புத்தாண்டும்....

Wednesday, 28 December 2011

கைப்பிடித்த பொழுதுகள்




சாலையைக் கடந்து செல்கையில்
அதிவேகமாய் வரும் வண்டியைக் கண்டு
கண்ணை மூடிக் கொண்டு
என் கையை இறுகப் பற்றிய பொழுதுகள்...
என் சோகச் சுமையை
சுகமாய் பங்கிட்டுக் கொண்டு
ஆதரவாக என் கையை
உன் கையில் கொண்ட பொழுதுகள்...
வீட்டை நெருங்கும் ஒவ்வொரு அடியிலும்
உன் விரல்களில் ஒன்றை விடுவித்துக் கொண்டு
கடைசி விரலில் பிரிவும் பிரியமும்
இணைத்து பேசி சென்ற பொழுதுகள்...
என் அழகான பொழுதுகளுக்கு சொந்தமான‌
உன் கைபிடிப்பதற்காகவே கைகலப்பில்
ஈடுபடும் என் கரங்கள்
இன்று மலர் தூவி வாழ்த்துகின்றன...
மணமேடையில் வேறொருவன் கைபிடித்து
நீ வலம் வரும் போது...

Tuesday, 27 December 2011

அழியாத ஓவியம்





"மழையில் நனைந்தும்
அழியாத ஓவியத்தைப் பார்த்திருக்கிறாயா??"
என்று கேட்டேன் நான்..
"அது எப்படி இருக்க முடியும்!!!
நான் பார்த்தது இல்லை இதுவரை"
என்றாய் நீ...
"இதை பார் தெரியும்"
என்று கொடுத்தேன் நான்..
நான் கொடுத்தது
ஓவியத்தை அல்ல!!!
முகம் காட்டும் கண்ணாடியை...